
காயீதே மில்லத் இஸ்மாயில் சாஹிப்
Thursday, June 6, 2013

Friday, September 23, 2011
இந்தியாவிற்கு யார் யார் பகைவர்களோ...

1971 பங்களாதேஷ் போரினால் எங்கும் பதற்றம் நிலவியது. இந்தியாவிற்கும் இஸ்மாயில் சாஹிபிற்கும் சோதனையான நேரம். இதனால் எங்கும் கேள்விகள்:
"இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் போர் ஏற்ப்பட்டால் தங்கள் இயக்கத்தின் செயல்முறை எப்படி இருக்கும்?" என்று புது டில்லி உருது ஏடான "ஹுமா" காயிதே மில்லத்தை வினவியது.
இந்தியா எங்கள் தாய் நாடு. இந்தியாவிற்கு யார் யார் பகைவர்களோ அவர்கள் இந்திய முஸ்லிம்களுக்கும் பகைவர்கள் எதிரி படைபலத்தால் எதிர்த்தால் நாமும் படைபலத்தால் எதிர்ப்போம். எதிரியை புறமுதுகு காட்டி ஓடச் செய்து தோல்வி அடைய செய்வோம். இந்தியா மீது மீண்டும் பாகிஸ்தான் படை எடுக்குமானால் அதனை முறியடித்துவிரட்ட, இந்திய நாட்டைப் பாதுக்காக்க உடல், பொருள், உயிரனைத்தும் அளித்து போராட இந்திய முஸ்லிம்கள் அணியமாக உள்ளனர். 1965 ஆம் ஆண்டு பாகிஸ்தான் போர் தொடுத்தபோதும் இதையே சொன்னேன் என்று விடை கூறினார் காயிதே மில்லத்.
Wednesday, September 21, 2011
காயிதே மில்லத்தின் தலைமைத்துவம்

இஸ்லாமிய இயக்கத்தின் பெயரால் அமைச்சர்களாகி வந்தவர்கள், சட்டமன்றத்தில் இருந்தவர்கள், நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள் எல்லாம் இந்த நாட்டிலே தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று இந்த நாட்டையே கடந்து சென்று விட்ட ஒரு காலக்கட்டத்தில்-
இஸ்லாமியச் சமுதாய பேரியக்கத்தின் சார்பாக எதையும் அனுபவிக்காமல், எந்த பதவியையும் பெற்றில்லாமல், விளம்பரத்தின் வெளிச்சத்தில் எந்த காலத்திலும் வந்திராமல் வாழ்ந்தவர் காயிதே மில்லத் அவர்கள்.
இஸ்லாமிய சமுதாயம் தலைவர்களினால் கைவிடப்பட்டு ஒரு அனாதை சமுதாயமாக ஆகிவிடக் கூடாது! என்ற காரணத்திற்காக " யார் இவர்களுடைய தலைவர்" என்று மற்றவர் நெஞ்சு நிமிர்த்திக் கேட்டபோது "நான் இருக்கிறேன்" என்று அவர்களுக்குரிய பணிவோடு சொல்லி "இந்த சமுதாயம் ஒரு குற்ற பரம்பரை சமுதாயம், இந்த சமுதாயம் நாட்டை பிளந்த சமுதாயம், நாசக்கார சமுதாயம்" என்று ஏசிப் பேசியப் போது-
அவர்களுக்கே உரிய பணிவோடும் , துணிவோடும் " எந்த அடிப்படையில் இந்தச் சமுதாயத்தை தூற்றிப் பேசுகிறிர்கள்? 800 ஆண்டுகாலம் இந்த நாட்டினுடைய மணி முடியை தாங்கி இருந்த சமுதாயம், இந்த மண்ணுக்கு ஒரு பண்பாட்டை வழங்கி, ஒரு கலாச்சாரத்தை உண்டாக்கி, "இந்த நாடு ஒன்று" என்ற உணர்வை பரந்த அளவில் ஏற்படுத்த. இன்றும் கூட பல அரசுகளினால் மேற்கொள்ள முடியாத பல பொதுநல திட்டங்களை எல்லாம் அமல்படுத்தி, இந்த நாட்டினுடைய செல்வத்துக்கு மதிப்பு சேர்த்த ஒரு சமுதாயத்தின் பாரம்பரியத்தை நீங்கள் குறை கூறுவது நியாயமா? என்று கேட்டு, நாட்டுப் பிரிவினைக்கு காரணமாக இருந்தவர்கள் யார், என்று அவர்களிடத்தில் எடுத்து சொன்னார்கள்.
பிரிவினையை அவர்கள் கேட்டது உண்மை. ஆனால் அதற்க்கு ஒப்புக் கொண்டவர்கள் நீங்கள் அல்லவா? என்ற கேட்டதும் அவர்கள் திகைத்தார்கள்.
Sunday, September 18, 2011
திருமண நாளிலும் கதராடை
நாட்டு விடுதலையில் பேரார்வம் கொண்டதன் காரணமாக காயிதே மில்லத் அவர்கள் தன்னுடைய திருமண நாளிலும் கதர் துணி அணிவதையே பிடிவாதமாக கொண்டார். பல கோடிகளுக்கு அதிபதியானவரின் மகளை மனம் முடிக்கும் முஸ்லிம் மணமகன், எளிய கதர் ஆடையை அணிந்து இருந்தார் என்பது பொதுவாகவே விலை உயர்ந்த வண்ண ஆடைகள் அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒரு அறிய காட்சியாயிற்று.
இந்தியை எதிர்த்து...

சட்டமன்றத்தில் நாம் இல்லாத காலத்தில் நமக்காகவும், தமிழ் மொழிக்காகவும் வாதாடிய தலைவர் காயிதே மில்லத் ஒருவரே! ... என்று பெருமை பாராட்டினார் என்.வி. நடராசன்.
"தந்தை பெரியார் தலைமையில் 1938 ஆம் ஆண்டு நாம் இந்தியை எதிர்த்துப் போராடினோம். அப்போது இருந்த தமிழக அரசு, நம் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. கணக்கற்ற கொடுமைகளை செய்தது.
அப்போது சட்டமன்றத்தில் நமது உறுப்பினர்கள் யாரும் இல்லை. நமக்காக வாதாட எவரும் இல்லாத நேரம் அது. ஆனாலும் அப்போது நமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்துச் சட்டமன்றத்தில் அன்றைக்கு எதிர்கட்சியாக இருந்த முஸ்லிம் லீக் இடிமுழக்கம் செய்தது. எதிர்த்து வாதாடியது. அத்தகைய நெடுங்கால உறவு நமக்கும் முஸ்லிம் லீகிற்க்கும் உண்டு"
இவ்வாறு 1968 ஆகஸ்டில் திருப்பத்தூர் கூட்டத்தில் அன்றைய தொழிலாளர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் என்.வி.நடராசன் பேசினார்.
Saturday, September 17, 2011
மா.பொ.சி. யும் - காயிதே மில்லத்தும்

காயிதே மில்லத் வாழும் நாட்டில் அவர் காலத்தில் நானும் வாழ்வதில் பெருமை அடைகிறேன் என்றார் சிலம்புச் செல்வர் மா.பொ.சி. காயிதே மில்லத்தின் 72 ஆம் பிறந்த நாள் விழாவின் போது அவரது மொழிப்பற்றையும், நாட்டுப் பற்றையும் இவ்வாறு எடுத்துரைத்தார்.
"மதத்தால் நாங்கள் வேறுப்பட்டிருந்தாலும், பேசுகின்ற மொழியால், பிறந்த நாட்டால் ஒன்றுப்பட்டவர்களாக இருக்கின்றோம். அரசியலிலே காயிதே மில்லத் அவர்கள் ரொம்பவும் சாதுவானவர். சண்டை சச்சரவுகள் வேண்டாதவர். சண்டை போட்டுக் கொள்ள விரும்பாதவர். நான் சண்டைக்குப் பயன் இல்லாதவன். அப்படிப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து இருக்கிறோம் என்றால் இந்த நாட்டில் அமைதி இருக்கும் என்று தானே பொருள்?"
Subscribe to:
Posts (Atom)