Wednesday, September 21, 2011

காயிதே மில்லத்தின் தலைமைத்துவம்



இஸ்லாமிய இயக்கத்தின் பெயரால் அமைச்சர்களாகி வந்தவர்கள், சட்டமன்றத்தில் இருந்தவர்கள், நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள் எல்லாம் இந்த நாட்டிலே தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று இந்த நாட்டையே கடந்து சென்று விட்ட ஒரு காலக்கட்டத்தில்-

இஸ்லாமியச் சமுதாய பேரியக்கத்தின் சார்பாக எதையும் அனுபவிக்காமல், எந்த பதவியையும் பெற்றில்லாமல், விளம்பரத்தின் வெளிச்சத்தில் எந்த காலத்திலும் வந்திராமல் வாழ்ந்தவர் காயிதே மில்லத் அவர்கள்.

இஸ்லாமிய சமுதாயம் தலைவர்களினால் கைவிடப்பட்டு ஒரு அனாதை சமுதாயமாக ஆகிவிடக் கூடாது! என்ற காரணத்திற்காக " யார் இவர்களுடைய தலைவர்" என்று மற்றவர் நெஞ்சு நிமிர்த்திக் கேட்டபோது "நான் இருக்கிறேன்" என்று அவர்களுக்குரிய பணிவோடு சொல்லி "இந்த சமுதாயம் ஒரு குற்ற பரம்பரை சமுதாயம், இந்த சமுதாயம் நாட்டை பிளந்த சமுதாயம், நாசக்கார சமுதாயம்" என்று ஏசிப் பேசியப் போது-

அவர்களுக்கே உரிய பணிவோடும் , துணிவோடும் " எந்த அடிப்படையில் இந்தச் சமுதாயத்தை தூற்றிப் பேசுகிறிர்கள்? 800 ஆண்டுகாலம் இந்த நாட்டினுடைய மணி முடியை தாங்கி இருந்த சமுதாயம், இந்த மண்ணுக்கு ஒரு பண்பாட்டை வழங்கி, ஒரு கலாச்சாரத்தை உண்டாக்கி, "இந்த நாடு ஒன்று" என்ற உணர்வை பரந்த அளவில் ஏற்படுத்த. இன்றும் கூட பல அரசுகளினால் மேற்கொள்ள முடியாத பல பொதுநல திட்டங்களை எல்லாம் அமல்படுத்தி, இந்த நாட்டினுடைய செல்வத்துக்கு மதிப்பு சேர்த்த ஒரு சமுதாயத்தின் பாரம்பரியத்தை நீங்கள் குறை கூறுவது நியாயமா? என்று கேட்டு, நாட்டுப் பிரிவினைக்கு காரணமாக இருந்தவர்கள் யார், என்று அவர்களிடத்தில் எடுத்து சொன்னார்கள்.

பிரிவினையை அவர்கள் கேட்டது உண்மை. ஆனால் அதற்க்கு ஒப்புக் கொண்டவர்கள் நீங்கள் அல்லவா? என்ற கேட்டதும் அவர்கள் திகைத்தார்கள்.

No comments: