Wednesday, August 24, 2011

அமுதத் தமிழ், ஆட்சி மொழி!!

திரு காயிதே மில்லத் அவர்களின் அரும்பெரும் பண்புகளில் ஒன்று தொலைநோக்கு. அரசியலில் அவர்களுக்கு இணையான தலைவர்கள் விரல்விட்டு எண்ணும் நிலையில் கூட இருந்ததில்லை! மொழிக் கொள்கையிலும் அவ்வாறே!

இந்தியா விடுதலைப் பெற்ற 1947 ஆம் ஆண்டு முதல் அரசியல் நிர்ணய சபையிலும், நாடாளுமன்றத்திலும், மாநாட்டு அரங்குகளிலும் நாட்டு ஒற்றுமைக்கு உகந்த மொழிக் கொள்கைகளை ஓயாது ,உலங்கிய தனிச் சிறப்பும், பெருமையும் காயிதே மில்லத் அவர்களுக்கு மட்டுமே உண்டு. அவர்களின் வழி பின்பற்றியே மற்ற தலைவர்கள் பேசத் தொடங்கினர்.

யாரும் எண்ணிப் பார்த்திராத காலத்தில், "இந்தியப் பெருநாட்டின் தேசிய மொழியாக ஆட்சி மொழியாக திகழும் சிறப்பு தமிழுக்குத்தான் உண்டு!" என்று அரசியல் நிர்ணய சபையில் காயிதே மில்லத் முழக்கமிட்டது சரித்திரம். இந்தி மொழிப் பெறக்கூடிய தகுதியை, அந்தஸ்தை எல்லா மொழிகளும் பெற்றாக வேண்டும் என்று உரிமைக் குரல் கொடுத்த பெருமகன் காயிதே மில்லத். " அண்ணல் காந்தி அடிகள் விரும்பிய ஆட்சி மொழி இந்தி அல்ல இந்துஸ்தானியே" என்று துணிவாக எடுத்துரைத்ததுடன், மொழி வெறியர்கள் "இந்தி" என்ற பெயரில் முதலில் எழுத்தை கொண்டு வந்து முடிவில் அனைத்தையும் அழித்து விடுவார்கள்! என்று நாடாளுமன்றத்தில் சிம்மக் குரல் எழுப்பிய வீரர் அவர்!

நான் எந்த மொழியையும் வெறுப்பவனல்ல. இந்தி மொழி உட்பட எல்லா மொழிகளையும் நேசிக்கிறேன். சிறுபான்மை மொழிகள் மீது, இந்தி கட்டாயமாக திணிக்கப்படும் போது தான் எதிர்கிறேன்! - "ஹுமா" எனும் உருது மொழி மாத இதழுக்கு அளித்த பேட்டியில் காயிதே மில்லத் இவ்வாறு கருத்துரைத்தார்.

உருது மொழிக்கும் கூட உரிய நியாயமும் இடமும் கிடைக்க வேண்டும், உருது, இந்தியைக் காட்டிலும் பழைமை வாய்ந்தது என்பதோடு பரவலாகப் பல இன மக்களாலும் பேசப்படும் மொழி என்பதே அதற்கு காரணம்!" என்றார் அவர்.

காயிதே மில்லத் ஆட்சி மொழிச் சட்டதிருத்த மசோதாவின் மீது நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை அறிய கொள்கை உரையாகத் திகழ்ந்துக் கொண்டு இருக்கிறது. அவர்களின் தொலை நோக்கைப் பறைசாற்றும் கருத்துரையாக நிலைத்து நிற்கிறது. ஒரு சுதந்திர நாட்டில் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொருவருக்கும் சம அந்தஸ்து இருக்க வேண்டும் என்ற பொது நோக்கே அந்த உரையின் அடி நாதம்.

1967 ஆம் ஆண்டு டிசம்பர் 13 இல் இந்திய நாடாளுமன்றத்தில் காயிதே மில்லத் நிகழ்த்திய அந்த உரையை சிந்தனைக் கருவூலம் என்று போற்றுவர். இதோ அந்த அரிய உரையின் பகுதிகள்:


"இந்தி"யா? இந்துஸ்தானியா?


" ஆட்சி மொழிப் பிரச்சினை சம்பந்தமாகப் பேசிய அநேக நண்பர்கள், காந்திஜியையும் சம்பந்தப்படுத்திப் பேசினார்கள். காந்திஜி அவர்கள் தமது அந்நிய காலத்தில் என்ன கூறினாரோ, அது மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும். இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று அவர் கூறவில்லை!.

அவர் கூறியது, " இந்தியாவின் ஆட்சி மொழியாக இரண்டு வித லிபிகளிலும் (நகாரி எழுத்திலும், உருது எழுத்திலும்) இந்துஸ்தானி இருக்க வேண்டும்" என்பது தான். இதை தான் காந்திஜி சொன்னார். அவரது கடைசிக் காலம் வரை அவர் இதை சொல்லிக் கொண்டே வந்தார். ஆட்சி மொழிப் பிரச்சினைப் பற்றி விவாதிக்கின்ற நேரத்தில், இதைப் பற்றிச் சிந்திக்கட்டும்" என்பதற்காக இதை நான் அரசியல் நிர்ணய சபையில் குறிப்பிட்டு சொல்லி இருகின்றேன். ஆனால், அந்த நேரத்தில் காந்திஜியின் இந்தக் கருத்தை யாரும் ஆதரிக்க மறுத்து விட்டார்கள்."


தமிழைச் சொன்னேன்!


"ஆட்சி மொழியாகத் தங்கள் சொந்த மொழிதான் இருக்க வேண்டும் என்று என் நண்பர்களில் சிலர் சொன்னார்கள்! அப்படியானால் நமது நாட்டில் போற்றத்தக்க முறையில் உயர்ந்த இலக்கியங்களைக் கொண்டதும் மிகப் பழமையான மொழியுமான தமிழ்தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று நான் சொன்னேன். ஆரம்பத்தில், மொழிப் பிரச்சினை எழுந்த வரலாறு இது தான். அந்த நேரத்தில் காங்கிரஸ்காரர்கள் மிகப் பெரும்பான்மையினராக இருந்த காரணத்தால், இந்தக் கருத்துகளுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. ஆனால் அப்போது இருந்தவர்கள் ஏக மனதகவோ, பெரும்பான்மையான ஆதரவுடனோ இந்தியை ஆட்சி மொழியாக ஒப்புக் கொள்ளவில்லை! காங்கிரஸ் காரர்களுக்குள்ளேயே பலத்த கருத்து வேறுபாடு இருந்தது. அவர்களது கட்சிக் கூடத்தில் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தான் இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டார்கள்.

அரசியல் நிர்ணய சபையில்கூட "இந்தி மிக பெரும்பான்மையானவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை" என்று நான் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் கூறுகிறேன். கட்சி கட்டுப்பாடு என்ற ஒரே காரணதுக்க்காகத் தான் அவர்கள் வெளிப்படையாக இந்தியை ஆதரித்தார்கள். இதுதான் நடந்த விஷயம். நடைமுறைக்கு சாத்தியமான காரியமல்ல. எனவே நிர்வாகத்தை நடத்துவதற்காக, குறிப்பாக மத்திய நிர்வாகத்தையும், பார்லிமென்டையும், மத்திய சட்டமியற்றலையும் நடத்துவதற்காக ஆட்சி மொழி பற்றிச் சிந்திக்கப்படுகிறது. அதற்காக, தேசத்திலுள்ள மொழிகளில் ஒரு மொழி பிரேரேபிக்கப்பட்டது. அந்த மொழி பேசுகிற நண்பர்கள், அவர்கள் மொழியே அப்படிப்பட்ட ஆட்சி மொழியாகவும் இருக்க வேண்டும் என்று இப்பொது வற்புறுத்தி வருகிறார்கள்".


அவர்களுக்கே அனுகூலம்!


"அந்த மொழிக்காக அவர்கள் ஏன் இவ்வளவு ஆதரவைக் காட்டுகிறார்கள்? இந்தி மொழிக்காக ஏன் இவ்வளவு சிரமத்தோடு வாதாடுகிறார்கள்? ஏனென்றால், இந்தி ஆட்சி மொழியானால் அவர்களுக்கு பல அனு கூலங்கள் உண்டு. அந்த பயனை அவர்கள் மாத்திரம் அனுபவிக்க விரும்புகிறார்கள். அத்தகைய நன்மைகளை மற்ற மொழிப் பேசுகின்றவர்கள் அனுபவிக்க முடியாது. ஆகையால் - எல்லா மொழிகளுக்கும் மத்தியில் எவ்வாறு சமத்துவம் ஏற்படும்?


இந்திகாரர்கள் மட்டுமே ஆளுவார்கள்!


இந்தியை எடுத்துக் கொள்வோம். இந்தி பேசுகிற பகுதியினரால், அவர்களது இரண்டாம் வயதிலிருந்தே அம் மொழிப் பேசப்படுகிறது. இந்தியைப் படிப்பதோடு மட்டுமல்ல: ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் இந்தியில் பேசுகிறார்கள். இவ்விதம் இந்தி பேசுகிற ஒருவரை ஒரு புறத்திலும், தமிழ், தெலுங்கு அல்லது மலையாளம் பேசுகிற இன்னொருவரை மற்றொரு பக்கத்திலும் வைத்துக் கொள்வோம். இவர்களில் இந்தி அறியாதவரின் நிலைமை எவ்வாறு இருக்கும்? அவர் வயது வந்தபோது ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டும் தான் இந்தி படிக்கிறார். இவர்கள் இரண்டு பெரும் இந்தி ஆட்சி மொழியாக ஏற்க்கபட்ட நிலையில் ஒரு பரீட்சை எழுதினால் நிலைமை என்ன ஆகும்? இந்தி பேசுகிறவரோடு, இந்தியை தாய் மொழியாக கொள்ளாதவர் போட்டி போட்டு, இந்தி மொழியில் பாண்டித்தியம் பெற்றவராக ஒரு போதும் வர முடியாது. இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டு விட்ட பிறகு இயற்கையாகவே நீங்கள் திறமையை எதிர்பார்ப்பீர்கள். அப்படிப்பட்ட திறமையை, இந்திகாரரை விட மேலாக இந்தி மொழி பேசாதவர் அடைந்து விட முடியாது. அதன் பிறகு, மெதுவாக நாளடைவில் என்ன நடக்கும் என்றால் இந்த நாடு இந்தி பேசுகிற வகுப்பினரால் மாத்திரம் தான் ஆளப்படும். கவனிக்க நாதியில்லாத மாற்றந்தாய் பெற்ற பிள்ளையைப் போல் உருது ஆக்கப்பட்டு விட்டது. இந்திகாரர்கள் இந்தியைப் பற்றி நிறையப் பேசுகிறார்கள். மற்ற மொழிகளையும் தாங்கள் விரும்புவதாக காட்டிக் கொள்ள முயல்கிறார்கள். அனால் அவர்களுடைய சொந்த பகுதிகளில் உருது மொழியை மதிப்பதில்லை. உருதுவை அவர்கள் ஒரு பிராந்திய மொழியாக கூட ஏற்றுக் கொள்வதில்லை! இப்படிப்பட்டவர்கள் தான் எல்லாவிதமான அறிவீனமான வாதங்களையும் எழுப்புகிறார்கள். சொல்லப்போனால் அவை வாதங்களே அல்ல..."(அவையில் கூச்சல்)

இப்படி குறுக்கிடுவது தான் நமது இந்தி நண்பர்கள் வாதாடுகிற முறை. அவர்கள் ஆத்திரமடைய வேண்டாம். நான் சொல்வது சரியா, தவறா என்று மட்டும் கூறட்டும்.... எனக்கு முன்பு பேசியவர் எல்லா மொழிகளுக்கும் இடையில் சமத்துவம் என்பது பற்றிப் பேசினார். அனால் அவர்களது சொந்த பகுதிகளிலாவது மற்ற மொழிகளை, அவர்களது சொந்த மொழிகளைப் போல் பாவிகிறார்களா? அவர்களுடைய பிராந்தியத்தில் உருதுவை துணை மொழியாகவாவது அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருகிறார்களா?..."(மீண்டும் கூச்சல்)


15 ஆண்டுகளுக்குப் பின்பு தெரியும்!

" ஆனால் அவர்கள் தேசத்திலுள்ள எல்லா மொழிகளிலும் பாலரும் தென்றும் ஓடும்" என்று இப்போது பேசுகிறார்கள். இதைக் கண்டுதான் நாம் அஞ்ச வேண்டியதிருக்கிறது. முதலில், அரசியல் நிர்ணய சபை இந்திப் பிரச்சினையை விவாதித்தது. அப்போது படித்த வகுப்பினரால் மட்டுமே அது நிறை வேற்றப்பட்டது. அந்தப் பிரச்சினையில், சாதாரணப் பொது மக்கள் சம்பந்தப்படவில்லை. அதைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. சிறிது காலம் சென்றது. மொழிவாரி மாகணங்கள் அமைக்கப்பட்டன. அப்போது தாய் மொழிக்கு முக்கியத்துவம் ஏற்ப்பட்டது. மொழிவாரி மாகாணங்களாக நாடு பிரிக்கப்பட்டதன் மூலம், தாய் மொழியின் அத்தியாவசியம் உணர்த்தப்பட்டு விட்டது. அந்த உணர்ச்சி வளர்ந்தது. அதன் பலனை இப்போது காண்கிறீர்கள். மக்கள், தற்போது தங்கள் தாய் மொழியின் நிலைமை பற்றிதான் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். இப்போது இருந்து இன்னும் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்த விளைவுகளின் உண்மையான நிலையை அவர்கள் உணரப் போகிறார்கள். அப்போது நிலைமை இதைவிட இன்னும் மோசமானதாக இருக்கும்.

நீங்கள், இந்தியை ஆட்சி மொழியாக்கி அதன்படி எல்லோரும் இந்தியை படிப்பதாக வைத்துக் கொள்வோம். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு புதிய தலைமுறை உண்டாகும். அவர்கள் சுதந்திர உணர்வோடு வளரும் தலைமுறையினராகி நாட்டின் முக்கியமான உத்தியோகங்களில் இருப்பார்கள். இந்திக்கு முதலிடம் கொடுக்கப்பட்டு வருவதையும், அதிகாரிகள் எல்லாம் இந்திகாரர்களாக இருப்பதையும் அவர்கள் காண்பார்கள். தங்களுடைய தாய்மொழியை நேசிக்கின்ற எவராலும் இத்தகைய நிலையை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது."

மிகவும் ஆபத்தானது!

" தேசத்தின் ஒற்றுமையை கருதிக் கூறுகிறேன். இது மிகவும் ஆபத்தானது. நாளைக் காலையில் கிழக்கே சூரியன் உதிக்கப் போவது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக இந்த ஆபத்து வரவிருக்கிறது. மக்களும் இதை உணர்ந்து இருக்கிறார்கள். இவ்வளவு தெளிவாக உள்ள இந்த உண்மையை, ஏன் நமது நண்பர்கள் மட்டும் உணராது இருக்கிறார்கள் என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆகையால், இதர மொழிப் பேசும் மக்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணரும்படி இந்தி நண்பர்களைத் தேசத்தின் ஒற்றுமையின் பெயரால் கேட்டுக் கொள்கிறேன். ஒரு சுதந்திர நாட்டில், ஜனநாயக நாட்டில் அவர்கள் விரும்புவதெல்லாம், ஒவ்வொரு மொழிக்கும் சம அந்தஸ்து இருக்க வேண்டும் என்று தான்."

ராஜாஜி ஆதரிப்பது ஏன்?

" இங்குப் பலர் பேசிய பேச்சுக்களில் இருந்தும் நாட்டில் இந்தி நண்பர்கள் ஈடுப்பட்டு வரும் பலவித நடவடிக்கைகளில் இருந்தும்-அவர்கள் இந்தியை ஆட்சி மொழியாக ஆக்குவதோடு சும்மா இருந்துவிடப் போவதில்லை என்பது தெளிவாகிறது. அவர்கள் குறியாகக் கொண்டிருப்பதெல்லாம், இந்தியை தேசிய மொழியாக ஆக்கி விட வேண்டும் என்பதாகும். நாட்டில் உள்ள எல்லா மொழிகளின் எழுத்துகளும் நாகரி எழுத்தில் மட்டும் எழுதப்பட வேண்டும் என்பதற்காக, சில தினங்களுக்கு முன்பு தான் ஒரு நாகரி எழுத்து மாநாடு நடைபெற்றது. முதலில் அவர்கள் எழுத்தை கொண்டு வருவார்கள். பின்பு அந்த மொழியிலிருந்து சில சொற்களை கொண்டு வருவார்கள். நாளடைவில் மற்ற எல்லா மொழிகளும் வழக்கத்திலிருந்து அறவே அழிந்து விடும். நமது நண்பர்களில் சிலர் திட்ட மிட்டு வேலை செய்து வரும் முறை இதுதான். அவர்கள் உண்மையிலேயே நாட்டுக்கு நன்மை செய்யவில்லை என்று நான் கூற விரும்புகிறேன். அவர்கள் தங்கள் மொழியைவிட நாட்டை அதிகம் நேசிப்பவராக இருந்தால், நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் ஒரே மாதிரியான இடரைத் தரும் ஒரு மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும்.அதனால் தான் ஆங்கிலத்தை விரும்புகிறார்கள். ஒரு காலத்தில் இந்திக்கு ஆதரவாக இருந்து வந்த ராஜாஜிக் கூட தற்போது ஆங்கிலத்தை ஆதரிக்கிறார். அதற்க்கு அவர் ஆங்கிலத்தின் மீது மோகம் கொண்டு இருக்கிறார் என்பது அல்ல. அதனால் அவருக்கு நாட்டுப் பற்றுக் குறைவு என்றும் கூறிவிட முடியாது. தற்போதைய நிலையில் நாட்டில் ஏற்ப்பட்டு இருக்கிற சூழ்நிலையை ஒட்டி நாட்டை திருத்தும் ஒரு அருமருந்தாகவே அவர் ஆங்கிலத்தை ஆதரிக்கிறார். எனவே ஆங்கிலம் தான் எல்லோருக்கும் ஒரே மாதிரியான இடர்பாடு தரும். ஒரு மொழி பெசுவோர்மட்டும் வேறு எந்த மொழி பேசுவோரையும் விட அதிக நன்மை அடைந்து விடுவார்கள் என்று கூற முடியாது. ஆகையால் தான் ஆங்கில மொழிக்காக பரிந்து பேசுவோர் அம்மொழியை ஆதரிக்கிறார்கள்."

"மே" (May) வேண்டாம்: "ஷால்" (Shall)வேண்டும்!

தற்போது இந்த மசோதாவின் துணை விதிகளைப் பற்றிக் கூறுகிறேன். இந்த மசோதா அதிகப் பிரையாசையோடு தயாரிக்கப்பட்டு இருக்கிறது. முந்திய இரண்டு பிரதம மந்திரிகளின் வாக்குறுதிகளையும் சட்ட வடிவில் இது அமைத்து கொடுக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. அனால் இதிலும் "மே" (இருக்கலாம்) என்ற சொல்லே மீண்டும் உபயோகிக்கப்பட்டு உள்ளது. உண்மையிலேயே ஆங்கிலத்தின் உபயோகம் மிகவும் வரையறுக்கப்பட்டு உள்ளது. இது துணை விதியின் புதிய செக்சன்கள் -(3-1), (3-2) இல் காணப்படுகிறது. வரையறுக்கப்பட்ட அளவிலேயே ஆங்கிலத்தின் பயன் அளிக்கப்படுகிறது. ஆங்கிலத்துக்குத் துணை ஆட்சி மொழி என்ற அந்தஸ்தைக் கொடுக்க விரும்பினால் செக்சன் (2) இல் உள்ள "மே" (இருக்கலாம்) என்ற சொல்லுக்குப் பதிலாக "ஷால்" (இருக்கும்) என்ற சொல்லை அமைக்க வேண்டும்.

தர்க்கம் ஏற்படும்! தாமதம் ஏற்படும்!!

" திருத்தங்கள் கொண்டு வந்துள்ள நண்பர்களில் சிலர், மொழி பெயர்ப்புகள் எல்லாம் பெறப்படுகிற இடங்களிலேயே செய்யப்பட வேண்டும் என்று வாதிட்டனர். அப்படியானால் அந்த மொழிப் பெயர்ப்புகள் சரியானவை அல்ல என்று அந்த கடிதங்களை எழுதியவர்கள் கூற இடமிருக்கிறது. இதை நடைமுறைக்குக் கொண்டு வரும் பொது தர்க்கங்கள் ஏற்ப்படும். தாமதம் ஏற்ப்படும். சிக்கல்கள் ஏற்ப்படும். ஆகையால் "கடிதங்களை அனுப்புபவர்கள், மொழி பெயர்ப்புகளையும் சேர்த்து அனுப்ப வேண்டும் என்பது தான் பொருத்தமாக அமையும்.

உரிமைக் கட்டுப்பாடு

"மீண்டும் செக்சன் (5) இல் செக்சன் (3) இன் துணை செக்சன் (2) விடப்பட்டு இருப்பதை நான் காண்கிறேன். இது பார்லிமென்ட் நடவடிக்கைகளில் பயன்படும் விசயங்களைப் பற்றியதாகும். இது நாட்டிலுள்ள சட்ட சபைகளின் வாக்கு எடுப்புக்கு சம்பத்தப்பட்டதல்ல. இவ்வாறு விடப் பட்டது ஏன் என்று என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. பார்லிமெண்டின் மொழி எது என்பது முக்கியமான விசயமாகும். ஏனென்றால் இங்கு உறுப்பினர்கள் பலரும் பல மொழிகளில் பேசுவதால், தினசரி ஏற்படுகிற சிரமங்களைப் பார்க்கிறோம். பார்லிமெண்டில் உரிமையை, மாநில சட்டசபைகளின் கைகளில் விட்டு விடுவது நல்லது அல்ல என்று சொல்வேன். ஆனால் நம்முடைய பார்லிமென்ட் உரிமைகளைத் தானே கட்டுப்படுத்திக் கொள்கிறது. ஆகையால் "பார்லிமெண்டின் நடவடிக்கையின் விசயங்களுக்காக" என்பதை சப் செக்சன் (5) இல் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறேன்.

ஆங்கில மொழி தடையாக இருக்காது!

சபாநாயகர்: துணை விதிகளைப் பற்றி பரிசீலனையின் போது, இந்த கருத்துக்களைக் கூறினால் நலமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

காயிதே மில்லத்: ஆம், அபோது நான் பேசுவதற்கு தாங்கள் இடமளிப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிற ஒரு சில லட்சம் மக்களை தவிர, ஆங்கிலம் மிக பெரும்பான்மையான மக்களின் மொழியன்று. நான் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக ஆக்கினால், அது மற்ற தாய் மொழிகளின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் தடையாக இருக்காது.அத்துடன் நாட்டில், இந்தி உட்பட எல்லாப் பிராந்திய மொழிகளுக்கும் ஒரே மாதிரியான அந்தஸ்து கிடைக்கும் வாய்ப்பும் ஏற்படும். ஆனால், நாம் இந்தியை ஆட்சி மொழியாக ஆக்கினால் நமது இந்தி பேசும் நண்பர்கள் மற்ற மொழிகளை விழுங்கி விட விரும்புகிறார்கள்.

சபாநாயகர்: கனம் உறுப்பினர் தற்போது முடிக்கலாம்.நான் இருபது நிமிடங்கள் அளித்து விட்டேன்.

காயிதே மில்லத்: ஆங்கிலம் அந்நிய மொழியாக இருந்தாலும் - நாம் சுதந்திரம் பெறுவதற்காகப் போராடியவர்களுக்கும், வீரர்களுக்கும் அந்த மொழி தான் உணர்ச்சி ஊட்டியது. நாம் சுதந்திரத்துக்காகப் போராடுவதற்கு அந்த மொழி தான் நமக்கு கருத்துகளையும், சக்தியையும் கொடுத்தது. நாம் அந்த மொழியை புறக்கணித்து விட்டால், கல்வியிலும், தொழில் துறையிலும், விஞ்ஞான வளர்ச்சியிலும் மற்ற எத்துறையிலும் முன்னேறக் கூடிய நமது சுதந்திரத்தை ஒழந்து விடுவோம். ஆகையால் இந்த எல்லா விசயங்களையும் அமைதியாகச் சிந்தித்து ஒரு நல்ல முடிவுக்கு வருமாறு நான் நமது நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இதர மொழி பேசும் மக்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணரும்படி, தேச ஒற்றுமையின் பெயரால் இந்தி நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு சுதந்திர நாட்டில் அவர்கள் விரும்புவதெல்லாம் ஒவ்வொரு மொழிக்கும், ஒவ்வொருவருக்கும் சம அந்தஸ்து இருக்க வேண்டும் என்பது தான்...

No comments: