Friday, September 2, 2011

தமிழினத் தலைவராக..!முத்தமிழ் வித்தகராக..!



யமுனை நதிக்கரையில், குள்ள நரிகளின் குகையில், தாமிரப்பரணி நதி தீரத்திலிருந்து சென்ற வீரர் காயிதே மில்லத் அவர்கள், தம் தாய்மொழிக்காகச் சிங்கமென முழங்கிய உரைகள் வரலாற்று ஏடுகளில் பதிவ செய்யப்பட்டன. தமிழினத் தலைவராக, முத்தமிழ் வித்தகராக தம்மை தாமே முடிசூட்டிக் கொள்ளாதவரின் வாழ்க்கைச் சுவடுகளை அறிந்து கொள்வோமே!

கண்ணியமிகு காயிதே மில்லத் என்று அழைக்கப்படும் முகமது இஸ்மாயில் சாகிப் அவர்கள் சூன் ஆம் நாளன்று திருநெல்வேலி பேட்டையில் பிறந்தார். தந்தையார் பெயர் மௌலவி மியாகான் இராவுத்தர்: தாயார் ஹமீதா பீவி.

இளம் வயதிலேயே தந்தையாரை இழந்துவிட்ட இஸ்மாயில் சாகிப் தாயாரிடமே அரபுக் கல்வியும் ,மார்க்க கல்வியும் பயின்றார். பின்னர் நெல்லை சி எம் எஸ். கிறிஸ்தவ மிசனரி பள்ளியில் பயின்றார். பிறகு திருச்சி ஜோசப் கல்லூரியிலும், சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் உயர்க் கல்விப் பெற்றார்.

இவர் புத்தகப் புழுவாக இருக்கவில்லை. இயற்கை அறிவு மிக்கவராக இருந்தார். பரிட்சையில் தேர்ச்சி பெறுவது என்பது இவர் விசயத்தில் எளிதாவகவே இருந்தது. எல்லாப் பாடங்களிலும் அவருக்கே முதலிடம். பரிசுகளும் குவிந்தன.

இளம் வயது முதலே, நாட்டு விடுதலையில் வேட்கை கொண்டிருந்தார். அடுத்து சில மாதங்களில் பட்டதாரியாக வேண்டியவர் அவர். அச்சமயம் காந்தி அடிகள் வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக, ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கினார்.

ஆம் ஆண்டு நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், ஒத்துழையாமை இயக்கத்தில் தம்மை பிணைத்துக் கொண்டு கல்லூரியிலிருந்து வெளியேறினார். பட்டதை துறந்தார்.

ஜின்னாவைப் போன்றே இவரும் காங்கிரசில் சேர்ந்து தமது அரசியல் வாழ்வைத் தொடங்கினார்.

தொடக்க காலத்தில் தமது குடும்பத்தைக் காப்பற்றுவதற்காக, சென்னை ஜமால் முகமது இராவுத்தர் தோல் மண்டியில் எழுத்தராகப் பணியாற்றினார். முழு ஈடுப்பட்டுடன் பணியாற்றியதால் தோல் வியாபாரமும் வளர்ந்தோங்கியது. எனவே, மண்டியின் பங்குதாரராக உயர்ந்தார்.

தம் முப்பதாம் வயதில் திருமணம், ஜமால் முஹைதீன் நிறுவனத்தின் உறவினர் அப்துல்லா சாகிபின் மகளான ஜமால் ஹமீதா பீவியை திருமணம் முடித்தார்.

மத்திய, மாநில அரசுகள் அமைத்த வணிகக் குழுக்களில் உறுப்பினராக நியமிக்கப்பட்டு அரும் பணியாற்றினார். சிறிது காலம் தென் இந்திய வர்த்தக சபையின் துணை தலைவராகவும் இருந்தார்.

1936 இல் முஸ்லிம் லீக் உறுப்பினர் பின்னர் மாநில தலைவரானார். இல் மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். சென்னை மாகாணம் பிரிக்கப்படாத பெரும் மாநிலமாக சென்னை ராஜதானியின் எதிர்க்க்கட்சி தலைவராக சட்டமன்றத்தில் சிறப்புடன் செயல்ப்பட்டார்.

1947 ஆம் ஆண்டு இந்தியத் துணைக் கண்டம் இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. டிசம்பரில் அகில இந்திய முஸ்லிம் லீக் நிர்வாக கமிட்டி கூட்டம் பாகிஸ்தான் தலைநகரான கராச்சியில் கூடியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்றும் இரு தனித்தனி லீகுகலாகப் பிரிக்கப்பட்டு இஸ்மாயில் சாகிப் அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

பாகிஸ்தானிலிருந்து, தம் நாடு திரும்ப விடைப்பெற்ற சமயம், அந்நாட்டு பிரதமர் நவாப் ஜாதா லியாகத் அலிகான் அவர்களிடம்,

" எத்தகைய சூழ்நிலை ஏற்ப்பட்டாலும் சரி, இந்திய முஸ்லிம்கள் விவகாரங்களில் இனி நீங்கள் தலையிடக் கூடாது" என்று துணிகரமாகச் சொன்னார், இஸ்மாயில் சாஹிப் அவர்கள்.

1948 இல் அவரே இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்திய முஸ்லிம்களை ஒன்று திரட்டி ஒரு கொடியின் கீழ் கொண்டு வந்தார்.

இதற்கிடையே, 1948 முதல் 1950 வரை
மத்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.


அரசியல் நிர்ணய சபையில், வளம் செறிந்த தமிழ் மொழியே நாட்டின் ஆட்சி மொழியாக வேண்டும் என்று ஆணித்தரமாக வாதிட்டார். இந்தி மொழிக்கு அதிக ஆதரவில்லை என்றாலும், ஒரு வாக்கு வித்தியாசத்தில் அது ஆட்சி மொழியாக்கப்பட்டது. சபையின் தலைவராக இருந்த இராசேந்திர பிரசாத், அந்த வாகை அளித்து "இந்தி திணிப்புக்கு" வழி வகுத்தார்.

மேலும், சிறுபான்மை சமூகத்தினரின் பாதுகாப்புக்கு காயிதே மில்லத் பரிந்துரைத்த பல யோசனைகள் அரசியல் சாசனத்தில் இடம் பெற்றன.

கூட்டாட்சி முறைதான் இந்தியாவுக்கு ஏற்றது என்று சட்டமன்றக் கலைப்பு அதிகாரம் ஆளுநருக்குக் கூடாது என்று அரசியல் நிர்ணய சபையில் வாதிட்டு இருக்கிறார்.

சென்னை, திருச்சி, அதிராம்பட்டினம் முதலிய தமிழ்நாட்டு நகரங்களிலும், கேரளாவிலும் கல்லூரிகளை நிறுவுவதில் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார்.

தொகுதிக்குச் செல்லாமல் மூன்று முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையும் சாதனையும் வேறெந்த தலைவருக்கும் இந்நாள் வரை கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த அவர், கேரளாவில் மஞ்சேரி தொகுதி மக்களால் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டது நாடறிந்த உண்மை.

முதலமைச்சர்களாகப் பதவி வகித பிரகாசம், ஓமந்தூரர் இராமசாமி ரெட்டியார், குமாரசாமி இராசா, இராஜாஜி ஆகியோர் ஒரு முகமாகக் காயிதே மில்லத் அவர்களின் உயர் பண்புகளைப் போற்றினர்.

1953 ஆம் ஆண்டில் இராஜாஜி சென்னை மாநில முதலமைச்சராக இருந்தபோது - நெருக்கடி ஏற்ப்பட்டப்போது காப்பாற்றினார் காயிதே மில்லத்.

மறு ஆண்டில், காமராசர் முதலமைச்சராகிக் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டப் போது அவருக்கு ஆதரவளித்து, ஆட்சி நீடிப்பதற்கு வழி வகுத்தவர் காயிதே மில்லத் ஆவார்.

மத்திய அரசிலும் நேரு, சாஸ்திரி, இந்திரா ஆகியோர் மதித்து உரிய மரியாதை வழங்கினர்.

சீன படையெடுப்பின் போது " தாயகத்தை காத்திடத் தன் ஒரே மகனைத் தருகிறேன்" என்று மார்தட்டி முன் வந்தவர் காயிதே மில்லத்.

பங்களாதேஷ் போரின்போது "இந்தியா எங்கள் தாய்நாடு, நாம் அனைவரும் இந்தியர்கள். இந்தியாவிற்கு யார் யார் விரோதிகளோ அவர்கள் இந்திய முஸ்லிம்களுக்கும் விரோதிகள் தான்" என்று முழங்கினார்.

" கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, மொழிப்பற்று, நாட்டுப்பற்று, நாணயம், நம்பிக்கை, அரசியல் நேர்மை, அறநெறி, அடக்கம், கொள்கை, கோட்பாடு" என்று எந்த கோணத்தில், எந்தப் பரிமாணத்தில் பார்த்தாலும் தமது நெடிய உருவத்தைப் போன்றே உயர்ந்து நிற்பார், காயிதே மில்லத் அவர்கள்.

காயிதே மில்லத்தின் தனிப்பட்ட வாழ்க்கை, அப்பழுக்குச் சொல்ல முடியாத அவ்வளவு தூய எளிய வாழ்க்கை! "திறந்த புத்தகம்" என்பார்களே அந்த மாதிரி ஒழுக்கம் மிக்க உயர்ந்த வாழ்க்கை. காயிதே மில்லத்தோடு பழகியவர்களுக்கு அவரது தாயுள்ளம் தெரியும்.

1967 இல் தி. மு. க உடனும், சுதந்திராக் கட்சியுடனும் முஸ்லிம் லீக் கூட்டு சேர்ந்தது.

அண்ணா, இராஜாஜி, காயிதே மில்லத் ஆகியோர் கூட்டணிப் பிரச்சாரம் செய்து தி. மு.கவை அரியணையில் ஏற்றினர்.

காயிதே மில்லத் என்றால் "சமுதாய வழிக்காட்டி" என்று பெயர்.

"ஒரிசா, மகாராஷ்டிரம், ஆந்திரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கூட காண முடியாத ஒற்றுமையைக் தமிழ்நாட்டு மக்கள் வேறுபாடின்றி கடைப்பிடித்து வருகிறார்கள். அதற்கு உதாரணமாக நாகூர் விளங்குகிறது! காயிதே மில்லத் விளங்குகிறார்" என்றும் சிலம்புச் செல்வர் ,ம.போ. சி. அவர்கள் கூற்று இதனை மெய்ப்பிக்கிறது.

"மலைகளின் ஊடே மூலிகைச் செடிகளின் சாரத்தை சுமந்து வரும் அருவி போன்றது அவரது பேச்சு!

பூமிக்கடியில் ஓடும் தங்க ரேகைகள், அவரது கருத்து.

தான் பெற்ற கன்றை நாவினால் தடவும் தாப்பசுவின் தன்மை, அவரது தலைமை!

29.09..1972 அன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கல்லீரல் நோய்க்குச் சிகிச்சை பெற சேர்க்கப்பட்டார். 05.04.1972 அன்று அதிகாலை மணிக்கு அவரது இன்னுயிர் பிரிந்தது.

"காலங்கள் பிறக்கும்: காயிதே மில்லத் போன்ற கனிவானவர்கள் பிறப்பது அவ்வளவு எளிதல்ல. அவர் ஒரு மாணிக்கம்!.

No comments: