Tuesday, February 16, 2010

காயீதே மில்லத் மணி மண்டபம் திறப்புவிழா





பூமி அதிராத நடை.. புன்முறு வல் பூந்தோட்டம் போட்ட முகம்... கருணை நிலா ஒளி வீசும் விழிகள்... மென்மையான குரல்... எந்த நிலை யிலும் கண்ணியம் தவறாத சீர்மை - இதுதான் காயிதே மில்லத் இஸ்மா யில் சாயபு.

எங்கள் தமிழாசிரியர் அன்றைக்கு ஒரு நாள் - வகுப்பில் தமிழ்ப் பாடம் நடத்துவதற்குப் பதிலாக 'அரசியல்' பேசினார். ''எத்தனையோ தலைவர்கள் தமி ழுக்காக உயிர்விடுகிறேன் என்கிறார் கள். ஆனால், இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்த மொழி இருக்கலாம் என்ற விவாதம் டெல்லியிலே வந்தி ருக்கிறது. வடக்கே உள்ளவர்கள் இந்திதான் ஆட்சிமொழி என்கிறார் கள். தெற்கே உள்ளவர்கள் ஆங்கிலம் தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் ஒரு 'சாயபு'தான் 'எங்கள் தமிழ்மொழி எல்லா வளமும் பெற்ற மொழி. அதுவே இந்தியாவின் ஆட்சி மொழி யாக இருக்கத் தகுதி உள்ளது' என்று பேசியிருக்கிறார். அவர் இஸ்மாயில் சாயபு. நல்ல தமிழ் பேசும் நெல்லை யைச் சார்ந்த பச்சைத் தமிழர்!''

கேரளத்திலுள்ள மஞ்சேரி (இப் போதைய மலப்புரம்) நாடாளுமன்றத் தொகுதிக்குள் நுழையாமலேயே காயிதே மில்லத் வெற்றி பெற்றிருந்த நேரம். அவரைச் சந்திக்க நினைத் தேன். எக்கச்சக்கமான கூட்டம், மலர் மாலை, கைத்தறித் துண்டு, பட்டாசு வெடிகள் இவையெல்லாம் இருக்கும் என நினைத்து அவரது இல்லத்தை அடைந்தபோது, அதிகாலை நேரத்து ஏரிக்கரைபோல அமைதியாக இருந்தது அவரது வீடு.
என்னைப் பார்த்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி: ''பசியாறிட்டீங் களா?''
'பசியாறுதல்' எனும் தமிழ்ச் சொல் லின் அழகு பற்றி வியந்து போனேன். ''உணவு உண்பதற்கு இப்படி ஒரு சொல்லா உங்கள் பகுதியில்?'' என்று கேட்டேன். ''உணவு உண்டீர்களா என்பதற்காக அல்ல இந்தச் சொல்! 'பிரேக் ஃபாஸ்ட்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரானது இந்தச் சொல். காலை உணவு உண்டீர் களா என்று கேட்பதற்குத்தான் இந்தச் சொல் பயன்படுத்தப்படும்'' என்று பதி லுரைத்தார்.

எழில் எழிலான தமிழ்ச் சொற்கள் எத்தனை நெல்லைப் பகுதியில் வழங் குகின்றன என்று அவர் அடுக்கிக் கொண்டே போனார். 'புட்டிங்' என்ற சிற்றுண்டி குறித்த சொல்லுக்கு 'வட்டில் அப்பம்' என்ற சொல் இருப்பதாக அவர் கூறியபோது, இமை இரண்டும் சேராவண்ணம் நெடுநேரம் அவரைப் பார்த்தபடி இருந்தேன்.

நபிகள் நாயகம் விழா! காயிதே மில்லத் பேச இருக்கிறார். அதற்கு முன், திராவிட இயக்கத்தைச் சார்ந்த ஒருவர் பிள்ளையார் பற்றிய கதையைக் கூறிக் கேலி செய்தார். காயிதே மில்லத் தமது பக்கத்தில் இருந்தவரிடம் ஏதோ சொல்ல, பேச்சாளரின் பேச்சு அதோடு முடிக்கப்படுகிறது!
காயிதே மில்லத் பேசும்போது சொன்னார்... ''இது புனிதமான மீலாது விழா மேடை. இதில் நபிகள் நாயகத்தின் சிறப்பு, இஸ்லாத்தின் மேன்மை பற்றிப் பேச மட்டுமே அனுமதிக்கப்படும். பிற மதத்துக் கடவுள்களைப் பற்றிக் கேலி செய்து பேசக்கூடாது. இஸ்லாமிய மார்க்கம், 'பிற மதத்துக் கடவுள்களைப் பற்றி கேவலம் செய்து பேசாதீர்கள்' என்று கூறியிருக்கிறது.''

இத்தகைய பண்பு நலன்கள் கொழித்துச் செழித்து இருந்த காரணத்தால்தான் அவர் 'கண்ணியமிகு காயிதே மில்லத்' என அழைக்கப்படுகிறார்.

No comments: